
தொலைதூரத்தில்
வரைபடப் புள்ளிகளாய் தெரியும்
புகை மலை முகடுகளுக்குப் பின்னுள்ள
நிலத்தின் இதயத்திலிருந்து
கடல் துவங்குவதாகவும்
நிமிர்ந்த குறியின் சாயல்களில்
விரிந்திருக்கும் மணற்வெளியில்
நீர் சலித்த மோகினிகளும்
வனம் சலித்த நீலிகளும்
தழுவிக் கிடப்பதாகவும்
கிராமத்து யட்சியொன்று
அதன் பெரும் ஏக்கத்தை
என்னிடம் கடத்தியது
குறி நிலக் கிளர்வுகளோடு
ஏங்கிச் செத்த நிகழ் வேட்கையின்
கொடுங்கனவில்
இலுப்பை முனியின் நீள்முடியைக்
கைவசப்படுத்திய என் முப்பாட்டன் தோன்றி
அவ்வுன்னத நிலங்களில்
மலங்கழித்துத் திரிவதாய்
கெக்கலித்தான்
அவனையறியாமல் அவனின் விதைப் பையினுள்
தஞ்சம் புகுந்தேன்
காலத்தின் உறைந்த உதடுகளோடும்
புகையிலை வாசங்களோடும் பயணித்து
முடிவின்மையின் சாஸ்வதங்களை முத்தமிட்டபடி
விழுங்கக் காத்திருக்கும்
யோனி நிலத்தினுள் புதைந்து கொள்வேன்.
--
பவுத்திரம் :- http://www.ayyanaarv.com/2010/02/blog-post_16.html




No comments:
Post a Comment